Random image

புத்தாண்டு: தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  2019ம் ஆண்டு எல்லோருக்கும் இனிய ஆண்டாக அமைய  வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

இதுகுறித்து திராவிட முன்னேற்றக்கழக முகநூல் இணையதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அதில்,

கழக தலைவர் அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி’

01.01.2019 அன்று புத்தாண்டு பிறப்பு என்பது, புத்துணர்வு தோன்றுவது, புதிய பயணம் தொடங்குவது. அது ஆங்கில ஆண்டு மாற்றம் என்பது மட்டுமல்ல; நமது ஆளுமையின் பரிணாம வளர்ச்சி மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வேண்டும். அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல; தனிமனிதர்களின் தொகுப்பான ஒரு சமூகத்துக்கும், சமூகங்களின் கூட்டான நாட்டுக்கும் அது தான் இலக்கணம். தொடர்ந்து அத்தகைய வளர்ச்சியை நோக்கிய உதயக்கதிரொளி பாய்ச்சுவதாகப் புதிய ஆண்டு, எங்கும் இன்பம் தரும் எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும்; அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அத்தகைய தன்னம்பிக்கையுடன் புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம். தமிழ் நாட்டவர்க்கும், உலகத்தமிழர்க்கும், அனைத்துக்கட்சித் தோழர்களுக்கும், கழக உடன்பிறப்பு களுக்கும், அனைவர்க்கும் எனது அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.