சென்னை

டாஸ்மாக் ஆங்கில புத்தாண்டு சமயத்தில் ரூ.316 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது.

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது.  இந்த கடைகளின் மூலம் அரசுக்கு நாள் தோறும் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரையில் வருவாய் கிடைக்கிறது.  தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக சாதாரண நாட்களைத் தவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற முக்கியமான விடுமுறை நாட்களில் விற்பனை அதிகரித்துக் காணப்படும். என்பதால் கடைகளில் முன்பாகவே 10 முதல் 15 நாட்களுக்குத் தேவையான மதுபான வகைகள் இருப்பு வைக்கப்படும்.

இந்த 2020 ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி வழக்கம் போல் மது விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்பட்ட போதிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.   ஆகவே, டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவதால் புத்தாண்டிற்கு மதுவிற்பனை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு மாறாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுவிற்பனை அதிகரித்தே காணப்பட்டது.  கடந்த 31.12.2019 மற்றும் 1.1.2020 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.316 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.  இது அரசு நிர்ணயித்திருந்த ரூ. 250 கோடியை விட அதிகமாகும்.

கடந்த 31.12.2019 அன்று சென்னை மண்டலத்தில் ரூ.38.12 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.38.52 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.29.50 கோடியும், மதுரை மண்டலத்தில் 39.46 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 36.30 கோடியும் என மொத்தமாக ரூ.181.40 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. புத்தாண்டு (1.1.2020) அன்று சென்னை மண்டலத்தில் ரூ.26.40 கோடியும், திருச்சி ரூ.27.02 கோடி, சேலம் ரூ.25.56 கோடி, மதுரை ரூ.28.54 கோடி, கோவை ரூ.26 கோடியும் என மொத்தம் ரூ.134 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.  மொத்தத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.316 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் இரண்டு நாட்களில் ரூ.69 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்து 2வது இடத்தில் திருச்சி மண்டலம் உள்ளது. இங்கு ரூ.68 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை ரூ.78 கோடி அதிகம் ஆகும். வாக்கு எண்ணிக்கை என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆயினும் கடந்த 1ம் தேதியே பலரும் மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்ததும் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.