ஆக்லாந்து:
நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது, “நியூசிலாந்தின் பெரிய நகரான ஆக்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கு நீக்கப்படுகிறது. வெற்றிகரமாக நியூசிலாந்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் பிற பகுதிகளில் ஏற்கெனவே கரோனா ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆக்லாந்தில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் இதுவரை 2,340 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மற்ற அனைவரும் குணமடைந்துள்ளனர் என்று நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவைத் தடுக்க மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது. அதற்குப் பிறகு அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், நவம்பர் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்பு மீண்டும் நீக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.