ராஸ் டெய்லரின் பேட்டிங்கால் போராடி வென்றது நியூசிலாந்து அணி

ராஸ் டெய்லரின் சிறப்பான பேட்டிங் மற்றும் ஹென்றியின் ஆகச்சிறந்த பந்துவீச்சின் காரணமாக கடைசிக்கட்டம் வரை போராடி வங்கதேசத்தை தோற்கடித்தது நியூசிலாந்து அணி.

வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் 9வது லீக் ஆட்டம், நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 49.2 ஓவர்களில் 244 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 64 ரன்களையும், மொஹமத் சைபுதீன் 29 ரன்களையும் குவித்திருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹென்றி, 9.2 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

சவாலான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில், முன்ரோ நிலைத்து ஆடாமல் ஏமாற்றமளித்தனர். கப்தில் 25 ரன்களிலும், முன்ரோ 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 55 ரன்களை எடுத்து 2 விக்கெட்களை தொடக்கத்திலேயே இழந்து நியூசிலாந்எது அணி தத்தளித்தது.

3வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர், கேப்டன் வில்லியம்ஸன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அனுபவமிக்க வீரரான டெய்லர், வில்லியம்ஸனுடன் இணைந்து மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடித்து அணியில் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 40 பந்துகளில் டெய்லர் அரைசதம் கண்டார்.

மற்றொரு பக்கம் நிதானமாக ஆடிவந்த வில்லியம்ஸன், 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மெஹதி ஹசன் பந்தில் ஆட்டமிழக்க, 105 ரன்கள் சேர்த்து வங்கதேச அணிக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த லதாம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் களமிறங்கிய நீஷம் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். ஹூசைன் ஓவரில் 82 ரன்களுக்கு டெய்லர் ஆட்டமிழக்க, 40 ஓவர்களில் நியூசிலாந்து அணி 200 ரன்களை எட்டியிருந்தது.

மீதமிருக்கும் 60 பந்துகளில் 45 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் 15 ரன்களில் கிராண்ட் ஹோம் ஆட்டமிழக்க, நீஷம் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். 47வது ஓவரில் ஹென்றி 7 ரன்களில் வெளியேற, 218 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த நியூசிலாந்த அணி, 47 ஓவர்களில் 244 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்திருந்தது.

48வது ஓவரை முஷ்பிர் ரஹ்மான் வீச, முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி சாண்ட்னர் நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 47.1 ஓவரில் 248 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன், “போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே மனநிறைவை தருகிறது. 250 ரன்கள் அல்லது அதற்கு மேல் என்கிற இலக்கு நிர்ணையிக்கப்பட்டிருந்தால் அது நிச்சயமாக எங்களுக்கு சவாலான இலக்காகவே இருந்திருக்கும். நாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் எங்களால் கவனம் செலுத்த இயலவில்லை. சில தவறான முடிவுகளை எடுத்துள்ளோம். அவற்றை இங்கு கூற விரும்பவில்லை. ஆனால் இது எங்களுக்கு ஓர் சிறந்த உதாரணமாக மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய வங்கதேச அணியின் கேப்டன் மொர்டாசா, “20 – 30 ரன்கள் கூடுதலாகவே நாங்கள் அடித்திருந்திருக்க வேண்டும். சிறப்பான போட்டியாகவே இப்போட்டி அமைந்தது. விக்கெட்கள் அதிக அளவில் வீழ்ந்தன. நாங்கள் போட்டியில் ஒருகட்டத்தில் வெற்றியை நோக்கி நகர்ந்தோம். பின்னர் ஏதோ ஓரிடத்தில் பாதை தவறிவிட்டோம். இதை பல போட்டிகளில் நாங்கள் செய்திருக்கிறோம். அந்த தவறை திருத்திக்கொள்வோம். போட்டியின் இடையில் சிறந்த பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை எங்களால் வழங்க இயலவில்லை. கடைசியில் இது கடுமையான போட்டியாகவே அமைந்தது. மிகச்சிறந்த ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து வென்றுவிட்டது. அதற்கு அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி