நியூசிலாந்தில் 2 மசூதிகளில் இன்று திடீர் தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக வெளியிட்டு, தங்களது தாக்குதலை நடத்தி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியின் பயன் தற்போது, சமூக சீரழிவுகளுக்கு அதிகளவில் பயன்பட்டு வருகிறது என்பது, பொள்ளாச்சி சம்பவங்கள், மற்றும் இதுபோன்ற   பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் உறுதியாகி  வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை, இஸ்லாமியர்களின் தொழுகைக்கு சிறந்த நாள். இதையொட்டி, ஏராளமான இஸ்லாமியர்கள் இன்று மசூதிக்கு சென்று தொழுகை செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை மசூதிகளுக்கு சென்றவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றது.

2 மசூதிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்த வர்கள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில்,  மசூதிக்குள் புகுந்து  துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நியூசிலாந்தில் உள்ள சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் மற்றும் அதன்அருகே உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கி ஏந்திய சிலர் உள்ளே புகுந்து தாக்கி இருக்கிறார்கள். இதில் 9 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து வங்கதேச கிரிக்கெட் டீம் மயிரிழையில் தப்பியது.

இந்த துப்பாக்கி சூடு குறித்து Brenton Tarrant 9 என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் வெளியிட்டுள்ள பேஸ்புக் லைவ் வீடியோவில், மசூதியின் வெளிப் பகுதியை  ஒளிபரப்பிவிட்டு, பின்னர் மசூதிக்குள் செல்கிறார்.. அங்கு  கூட்டமாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் தொழுகையில் இருப்பது தெரிய வருகிறது.  அந்த மர்ம நபர்  தொழுகையில் ஈடுபட்டுள்ளவர்களை  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறார்… பின்னர் அந்த வீடியோ, ரத்த வெள்ளத்தில் கிடப்பவர்களை காட்டுகிறது. அதில் ஏராள மானோர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதும், சிலர் மரணித்து இருப்பதும் தெரிய வருகிறது. 

இந்த துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டவில்லை. முதல் கட்டமாக 9 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்,  இந்த கொடூர  துப்பாக்கி சூட்டை நடத்தியது ஒரே ஒரு நபர்தான் என்று கூறியதாகவும், தற்போது 3 பேர் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதுவரை இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் யாரும் பிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் 4 பேரை  சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாகவும் நியூசி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு குறித்த லைவ் வீடியோ உடனடியாக இணையதளங்களில் இருந்து  நீக்கப்பட்டது.

இந்த பரபரப்பான  துப்பாக்கி சூடு நடந்த மசூதிக்கு வெளியில் இருக்கும் கார் ஒன்றில் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பபதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அந்த கொலைகாரனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.