வெல்லிங்டன்:

ஆயுத வலிமை குறைப்புக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்கி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வட கொரியாவின் ஆயுத திட்டங்கள் பதற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் நியூசிலாந்தின் முக்கிய வெளிநாட்டு கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த துறையை துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெசிந்தா ஆண்டர்ன் மேலும் கூறுகையில், ‘‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது. வட கொரியாவில் இருந்து பெரிய அளவில் சவால்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக அணு ஆயுத எதிர்ப்பு கொள்கையின் அடையாளமாக இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய சூழ்நிலையிலும், எதிர்காலத்திலும் முக்கிய பங்காற்றும்’’ என்றார்.

வெளியுறவு துறை அமைச்சரான பீட்டர் 2005ம் ஆண்டில் வட கொரியாவுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து நீண்ட காலமாக அணு ஆயுத வளர்ச்சியை எதிர்த்து வருகிறது. சிறிய பசிபிக் நாடான நியூசிலாந்து பல கூட்டு நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

1980ம் ஆண்டின் மத்தியில் தொழிலாளர் கட்சியின் அரசு அணு ஆயுத போர் கப்பல்களுக்கு தடை விதித்தது. இதனால் நியூசிலாந்துடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்த வாய்ப்புகளை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. எனினும் இந்த உறவு 2016ம் ஆண்டில் சீராகி அமெரிக்காவின் போர் கப்பல் முதன்முறையாக 30 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.