பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து

3a0a02f90548043181ac87fe397524e31e2ba9bfபாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் வெள்ளிகிழமை இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 83.4 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்தது. ஜீத் ராவல் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய பாகிஸ்தான், 67 ஓவர்களுக்கு 216 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாபர் ஆஸம் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி 55 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து 85.3 ஓவர்களுக்கு 313 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது. ராஸ் டெய்லர் சதம் அடித்து 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை துவங்கிய பாகிஸ்தான் அணியின், துவக்க ஆட்டக்காரர்கள் சமி அஸ்லாம் 91 ரன்களும், கேப்டன் அஸார் அலி 58 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பாபர் ஆஸம் 16, சர்ஃப்ராஸ் அகமது 19, யூனிஸ் கான் 11, சோஹைல் கான் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸாத் சஃபிக், முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், இம்ரான் கான் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் அணி 230 ரன்களில் அனைத்து விகேட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில், நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. 1985-ஆம் ஆண்டிற்கு பின்னர் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மீண்டும் இப்போது தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.