வெலிங்டன்

சுக்களுக்கு வரும் ஒரு நோயை அடியோடு அழிக்க ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் நியூஜிலாந்து அரசு கொலை செய்ய உள்ளது.

பசுக்களுக்கு வரும் ஒருவகை நோயின் பெயர் மைகோபிளாஸ்மா போவிஸ் ஆகும்.    இந்த நோயால் தாக்கப்பட்ட பசுக்கள் அதிகம் உள்ள நாடாக நியுஜிலாந்து விளங்குகிறது.   கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் இந்த நோய் பசுக்களிடையே அதிகம் பரவி வருவது கண்டறியப்பட்டது.   முதலில் தெற்கு நியூஜிலாந்தில் இருந்த இந்த நோய் சிறிது சிறிதாக வடக்கு பகுதிக்கும் பரவத் தொடங்கியது.

இந்த நோயை தடுக்கவும் அடியோடு ஒழிக்கவும் நியூஜிலாந்து அரசு கடும் முயற்சியை மேற்கொண்டது.   ஆயினும்  இந்த நோய் பரவுவதை முழுவதுமாக தடுக்க இயலவில்லை.   நாட்டில் சுமார் 1,26,000 பசுக்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது.  நோய் முற்றி இருந்த 26000 பசுக்கள் உடனடியாக கொல்லப்பட்டு விட்டன.

நேற்று நியூஜிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் மக்களுக்கு அளித்த உரையில், “நீயுஜிலாந்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகும்.  நமது நாட்டில் மொத்தம் 66 லட்சம் பசுக்கள் உள்ளன.   இந்நிலையில் இந்த நோயை அடியோடு அழிக்க 1 லட்சம்  பசுக்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பசுக்களை கொல்வதில் அரசுக்கு சிறிதும் விருப்பம் இல்லை.   எனினும் நாட்டின் பசு வளத்தை காக்க வேறு வழி இல்லை என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.   மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.