ஹேக்லி ஓவல்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

நியூசிலாந்தில் உள்நாட்டு டி 20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு போட்டியில் வடக்கு நைட்ஸ் அணியும், கேன்டர்பரி அணிகளும் மோதின்.

முதலில் ஆடிய வடக்கு நைட்ஸ் அணி, 219 ரன்கள் குவித்தது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேன்டர்பரி அணி களம் இறங்கியது.

இந்த போட்டியில் நியூசி. வீரர் லியோ கார்ட்டர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருந்தது.

ஆட்டத்தின் 16வது ஓவரை வீச வந்தார் டேவ்விச். முதல் பந்தை அவர் வீச, அதை எதிர்கொண்ட லியோ கார்ட்டர் ஒரு சிக்சர் அடித்தார். அப்படியே அடுத்த வந்த பந்துகளையும் சிக்சராக அடித்து விளாசினார்.

மொத்தம் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டார். மொத்தம் 29 பந்துகளில் 70 ரன்களை குவித்தார். அவரின் இந்த அதிரடி ஆட்டத்தினால் கேன்டர்பரி அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டதன் மூலம், இந்த சாதனையை படைக்கும் 7வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக, கேரி சோபர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), ரவி சாஸ்திரி (இந்தியா), ஹெர்ஷல் கிப்ஸ் (தென்னாப்பிரிக்கா), யுவராஜ் சிங் (இந்தியா), ரோஸ் வைட்லி (இங்கிலாந்து) மற்றும் ஹஸ்ரத்துல்லா ஸசாய் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளனர்.