வெலிங்டன்: கொரோனா காரணமாக நியூசிலாந்து பொதுத் தேர்தல் மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா தாக்கம் இன்னமும் ஓயவில்லை. 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனா பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந் நிலையில், தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு ஆச்சர்யம் காட்டியது  நியூசிலாந்து.

ஆகையால் கொரோனா இல்லாத முதல் நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 102 நாட்கள் கொரோனா இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக செப்டம்பர்  19ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் அக்டோபர் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், தேர்தல் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்படாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சில காலம் கொரோனா நம்முடன் இருக்கும். அதன் விளைவாக தேர்தலை தொடர்ந்து தள்ளி வைப்பது நோய் பரவலின் அபாயத்தை குறைக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.