வெள்ள நிவாரணத்துக்கு திருமண பரிசுகளை அளித்த தம்பதியர்

திருவனந்தபுரம்

கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்துக்கு வெள்ள நிவாரண பொருட்களை பரிசாக பெற்று அனுப்பி வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள வழுத்தகாடு பகுதியை சேர்ந்தவர் சரத்.   இவர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணி புரிபவர்.  இவர் தனது உறவுப் பெண்ணான ஷ்ரதாவை கடந்த 17 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.   இவரது பகுதி வெள்ளத்தால் பாதிப்பு அடையவில்லை எனினும் மற்ற பகுதிகள் பாதிப்பு அடைந்ததால் மணமக்கள் வருத்தமுற்றனர்.

எனவே இருவரும் இணைந்து திருமணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் குழுவை தொடங்கினர்.   அதில் தங்கள் திருமணத்துக்கு பரிசளிக்க விரும்புவோர் பரிசுப் பொருட்களாக வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.   இதே வேண்டுகோளை திருமண விழாவிலும் தெரிவித்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு மட்டுமே இவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் திருமணத்துக்கு வந்த அனைவரும் வெள்ள நிவாரணப் பொருட்களையே பரிசாக அளித்தனர்.   பணம் மட்டுமின்றி குடிநீர் பாட்டில்கள், துணிமணிகள், உணவு தானியங்கள், பிஸ்கட்டுகள், மருந்துகள் என அனைத்து வகை பொருட்களும் பரிசாக வந்துள்ளன.

அவை அனைத்தையும் வெள்ளப் பகுதிகளுக்கு பெற்றோர்கள் மூலம் இருவரும் அனுப்பி வைத்துள்ளனர்.  இது குறித்து சமூக தளங்களில் பலரும் புகழ் மாலை சூட்டி வருகின்றனர்.   ஆனால் சரத் மற்றும் ஷ்ரத்தா ஆகிய இருவரும் “எங்களுக்கு இதில் புகழ் தேவை இல்லை.    உங்களால் முடிந்த நிவாரணப் பொருட்களை துயருறுவோருக்கு அனுப்பி வைத்தால் அதுவே நீங்கள் எங்களுக்கு அளிக்கும் வாழ்த்துக்கள்” என பதில் அளித்துள்ளனர்.