தவறான செய்தி வெளியிட்ட ரிபப்ளிக் டிவி வருத்தம் தெரிவிக்க வேண்டும்……செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் உத்தரவு
டில்லி:
டிவி சேனல்கள் மீது நேயர்கள் அளிக்கும் புகார்களை விசாரிப்பதற்கு செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ரிபப்ளிக் டிவி.யில் ஒளிபரப்பான ‘ஜிக்னேஷ் பிளாப் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் தெரிவித்த ஒரு கருத்துக்கு ரிபப்ளிக் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 30ம் தேதி ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ‘‘அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, செய்தி தர ஆணைய விதிமுறைகளுக்கு புறம்பாக நியாயமற்ற, தேவையற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதனால் வரும் 7ம் தேதி இதற்கு டிவி.யில் முழுமையான வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதன் சிடியை ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி மீது சிங் என்பவரும், அவரது மனைவியும் இந்த புகாரை அளித்திருந்தனர். கடந்த ஜனவரியில் நாடாளுமன்ற சாலையில் நடந்த ஜிக்னேஷ் மேவாணியின் பேரணியில் ரிபப்ளிக் டிவியின் பெண் நிருபர் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் இந்த சிங்குக்கு தொடர்பு இருக்கிறது என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக காமுகர், தேச விரோதி, கீழ்தரமானவர், முறையற்ற நடத்தை என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தான் சிங் தம்பதி ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.