பொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள்: மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

சென்னை: அரசு தொலைக்காட்சி ஊடகமான தூர்தர்ஷன், பொதிகை தமிழ் ஒளிபரப்பில்,  சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி  மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

மத்திய அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் தமிழ் சேனல் பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பொதிகை சேனலில் சமஸ்கிருத மொழிமொழியில் செய்தியறிக்கை ஒளிபரப்ப வேண்டும் என்பதற்காக தினமும் 15 நிமிடம் ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல்  கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, திணிக்கும் முயற்சியில் இதுவும் ஒருவகை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இதுகுறித்து ஒரு முறையீட்டை முன்வைத்தார்.  அப்போது, பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாவும், அந்த ஆணையை  ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.  இதை மனுவாக தாக்கல் செய்யுமாறு அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.