சென்னை:

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை  அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை என்று கட்சியின் பொருளாளர் தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக பல துண்டுகளாக சிதறியது.  பின்னர் இரு துண்டுகள் இணைந்து ஒரே கட்சியாக மாறியது. அங்கிருந்து கழற்றிவிடப்பட்டசசிகலா குடும்பத்தினர் தனிக்கட்சி தொடங்கினர். டிடிவி தினகரன் தலைமையில், அதிமுகவில் இருந்து பிரிந்த சென்ற  சிலர் ஆதரவுடன் அம்மா மக்கள் கட்சி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு சசிகலா பொதுச்செயலாளராகவும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தரப்பில் இருந்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கேட்டு  வழக்கு தொடரப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தங்களது கட்சிக்கு ஒரே சின்னத்தை நாடாளுமன்ற தேர்தலின்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால்,  அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை யாகவே போட்டியிட்டனர். அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், உச்ச நீதிமன்றம் சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார்.

இந்நிலையில், அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெறும்  அமமுக நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்த  3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அவர்கள் டிடிவி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது. அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டால், அதிமுக மீது டிடிவி தினகரன் எந்த உரிமையும் கோர முடியாது. இதை கருத்தில் கொண்டு அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ் செல்வன், அப்படியேதும் இல்லை என்று கூறி உள்ளார்.