சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகளின் நேரத்தை மாற்றி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2 ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன. இந்த முறையை மாற்றும் வகையில் தமிழக அரசானது 2006ம் ஆண்டுக்கு முந்தைய நடைமுறை போலவே ஒரே ஷிப்டில் கல்லூரிகளை நடத்த உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

பல அரசு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் அதிகம். அதே நேரத்தில் கட்டிட வசதிகள் குறைவு. ஆகையால் 2 ஷிப்ட் முறையில் காலை முதல் மதியம் வரை சில பட்டய வகுப்புகளும், மதியம் முதல் மாலை வரை சில பட்டய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் கல்லூரிகளில் பழைய நடைமுறைப்படி காலை முதல் மாலை வரை வகுப்புகளை மதிய உணவு இடைவெளியுடன் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 50 அரசு கல்லூரிகளில் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை வகுப்புகளை நடத்த உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 109 அரசு கல்லூரிகளிலும் இந்த பாடவேளை முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.