நாளிதழ், வானொலி, ரயில் நிலையங்கள்.. தமிழகமெங்கும் இந்தித் திணிப்பு!: அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளுமா?

நாளிதழ், வானொலி, ரயில் நிலையங்கள் என தமிழகமெங்கும் இந்தித் திணிப்பு நடக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் இதைக் கண்டுகொள்ளுமா என்று தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இது குறித்து அவர்கள் தெரிவிப்பதாவது:

இந்தித் திணிப்பை எதிர்த்து கடுமையாக போராடிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்தித்திணிப்பு தொடர்கதையாகவே உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள (அரசு) உள்ளூர் வானொலி நிலையங்கள்  அதிக அளவில் இந்தி மொழி நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் வர்த்தக ஒலிபரப்புகள் அனைவரையும் கவர்ந்தன.  திரைப்பட பாடல்கள் சுவையான நிகழ்ச்சிகள், என்று  அனைத்துத் தரப்பு மக்களும் ரசித்துக் கேட்டனர்.

ஆனால், அதெல்லாம் இப்போது வெறுங்கனவாகிப்போய்விட்டது.

தமிழ்நாட்டிலுள்ள சென்னை, திருச்சி, தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்பது ஏறத்தாழ இந்திமயமாகிவிட்டது.

வர்த்தக ஒலிபரப்பில் காலை முதல் மாலை வரை பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. உள்ளூர் (தமிழ்)  நிகழ்ச்சித் தயாரிப்புகள்  குறைக்கப்பட்டு, டில்லியில் இருந்து (இந்தி)  நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பப்படுகின்றன.

இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நேரம் போக மீதமுள்ள குறைந்த நேரத்தில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. அப்போதும்கூட இந்தி விளம்பரங்கள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன.

இந்தியே தெரியாத மக்கள் ஆகப்பெரும்பாலோர் வசிக்கும் மாநிலத்தில் இந்தி விளம்பரங்கள் ஏன்?

வானொலி செய்திகளும் இந்தி மயமாகிவிட்டன.  வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ‘சந்தேஷ் டூ சோல்ஜர்ஸ்’ (Sandesh to Soldiers) என்ற நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது.

இது நிகழ்ச்சி ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சியாகும். தேசப்பற்றை வளர்க்கிறார்களாம். சரி, புரியாத இந்தியில் ஒலிபரப்பி எந்த மக்களுக்கு தேசப்பற்றை வளர்க்க முடியும்?

இதே நிகழ்ச்சியை   தமிழில் நடத்தினால் ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தமிழ்நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியுமே!

தவிர எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி பிரதமரின் இந்தி உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றின் மூலம் தேசப்பற்று ஊட்டப்படுவதாக வானொலி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.  ஆனால், மக்களுக்கு எரிச்சலே ஏற்படுகிறது.

அது மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் நாளிதழ்களிலும் மத்திய அரசு இந்தியில் விளம்பரங்களை வெளியிடுகிறது.

ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தரும்படியான இந்தி விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியது. அதே போல இன்றும் ஒரு இந்தி விளம்பரம் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியிருக்கிறது.

இந்தி தெரியாத மாநில மக்களிடையே இந்த விளம்பரங்களால் யாருக்கு நன்மை?

எல்லாம் அரசுப்பணம். மக்கள் பணம். இதை இப்படி வீணாக்குவது எந்த விதத்தில் சரி?

அது மட்டுமல்ல… தமிழக ரயில் நிலையங்களில் இந்தி நூலங்கங்களை அமைக்கிறார்கள்.

உதாரணம்.. மதுரை ரயில்  நிலையத்தில் உள்ள ஹிந்தி நூலகம். மதுரையில் எதற்காக  ஹிந்தி நூலகம்? இங்கு இந்தி தெரிந்த எத்தனை பயணிகள் வருகிறார்கள்.. அவர்களில் எத்தனை பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்?

இப்படி மக்கள் பணத்தில் இந்தியை திணித்துவருகிறது மத்திய அரசு. இதை தமிழக கட்சிகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை.

இனியேனும் இந்த விசயத்தில் தமிழக கட்சிகள் கவனம் செலுத்தி குரல் கொடுக்க வேண்டும்” என்று ஆதங்கப்படுகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Newspapers, radio and railway stations… Hindi stuffing in Tamil Nadu Will Political Parties Consider?, நாளிதழ், ரயில் நிலையங்கள்.. தமிழகமெங்கும் இந்தித் திணிப்பு!: அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளுமா?, வானொலி
-=-