பொருளாதாரத்தில் கணக்கீடுகளை கொண்டுவராதீர்கள் என்றும், புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் தான் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியஅமைச்சர், பியூஸ் கோயல் வர்த்தக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நம்நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 % வளர்ச்சியுடன் செல்ல வேண்டு. ஆனால் நாம் தற்போது, 6-7 வரையான வளர்ச்சி தான் கொண்டுள்ளோம்.  ஆகையால் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கணக்குப் போட வேண்டாம்! அத்துடன் இந்த பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள்… ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை” என்று தெரிவித்தார்.

புவிஈர்ப்பு விசையைக் நியூட்டன் கண்டுபிடித்திருந்த நிலையில், பெயர் மாற்றி அவசரத்தில் ஐன்ஸ்டீன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளது, சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் தான் ஆட்டோமொபைல் துறை சரிவடைந்தது என்று கூறியது பலராலும் கிண்டல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.