சென்னையில்அதிகாலை முதல் புத்தாண்டு மழை…! பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை:

லகம் முழுவதும் 2020ம் ஆண்டு உற்சாகமாக பிறந்துள்ள நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்த நிலையிலும், மேலும் சில நாட்கள் மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு புத்தாண்டை மக்கள் எழுச்சியுடனும், உற்சாகமுடன் வரவேற்ற நிலையில், இன்று அதிகாலை முதலே ஜில்லென்ற காற்றுடன் மழை பெய்து வருகிறது.

வடசென்னை உள்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மாதவரம், பெரம்பூர், கோயம்பேடு, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், சென்ட்ரல், அசோக் நகர், கே கே நகர், கிண்டி, அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், மத்திய கைலாஷ், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, அடையாறு பகுதிகளிலும் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

மார்கழி மாதம் பிறந்துவிட்ட நிலையில், மார்கழி குளிர் ஒருபுறம் வாட்டியெடுக்க, இன்று காலை ஜில்லென்று மழையும் பெய்து வருவது சென்னைவாசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று மழை பெய்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் சென்னை தண்ணீர் பஞ்சமின்றி வளம்பெற வேண்டும் என்று மக்கள் வருண பகவானிடம் புத்தாண்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருந்தாலும், புத்தாண்டை வரவேற்று நள்ளிரவு முதலே  தங்கள் இல்லங்களின் வாசல்களில் அழகழகான கோலங்கள் போட்டிருந்த நிலையில், அதிகாலை மழையால், தங்கள் கோலங்கள் அழிந்து வருவதைக் கண்டு மனம் வெதும்பிப்போய் உள்ளதும் குறிப்பிடத்தக்கதுl