Random image

ஆங்கிலப் புத்தாண்டு: கே.எஸ்.அழகிரி, வைகோ, விஜயகாந்த், வாசன் உள்பட தலைவர்கள் வாழ்த்து

சென்னை:

ங்கிலப்புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

பிறக்கப்போகும் 2020 ஆம் ஆண்டு, கடந்த ஆண்டில் பட்ட துன்பங்களுக்கு முடிவு ஏற்படுகிற வகையில் ஆரோக்கியமான அரசியல் சூழல் ஏற்படும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நாடு முழுவதும் சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும் ஜனநாயக எதிர்ப்பு அலையின் காரணமாக மிகப்பெரிய மாற்றங்கள் நிகழுகிற ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமையும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் நாட்டு மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிற சூழல் நிச்சயம் உருவாகும். எனவே, 2020 ஆம் ஆண்டு பிறக்கும் போது புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும், அமைதியும், நல்லிணக்கமும் தழைத்து, மக்கள்மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென புத்தாண்டில் வாழ்த்துகிறேன். அனைத்து மக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இன்பம் பெருகும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வரும் 2020ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டுமென தேமுதிக சார்பில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

புத்தாயிரம் ஆண்டுத் தொடக்கம் என்பது போல, ஒரு தலைமுறையைக் குறிக்கின்ற பத்தாவது ஆண்டின் நிறைவு ஆண்டாக மலர்கின்றது 2020. நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். கடந்து போன ஆண்டின் நிகழ்வுகளும், பதிவுகளும், சந்திக்கப் போகின்ற ஆண்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள உதவிடும்.

தமிழகத்தில், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் காவு கொடுத்துவிட்டு, ஊழல் ஆட்சி கோலோச்சுகின்றது. ஆனால், இந்த நிலைமைகளை மாற்றி, பேரறிஞர் அண்ணா கனவு கண்ட மாநிலமாக ஆக்குவதற்கு, இந்த 2020 ஆம் ஆண்டில் நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்.

மதச் சார்பு இன்மையைப் பாதுகாப்போம்; அனைத்து சமயத்தினரிடமும் நல்லிணக்கத்தை வளர்ப்போம்.
எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயப் பெருமக்களுக்கு, வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 

01.01.2020 புதன் கிழமை தொடங்கும் புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம். நாளை ஜனவரி 1 ஆம் தேதி பிறக்கும் 2020 ஆம் புத்தாண்டு தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்திய திருநாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.

இந்திய நாட்டின் கலாச்சாரமான வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதை நிலைநாட்ட வேண்டும் அதை பேணிக்காக்க வேண்டும் என்பது நமது தலையாய கடமையாகும். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர, நாட்டின் பொருளாதாரம் பெருக, நாட்டின் பாதுகாப்பு வலுப்பெற இப்புத்தாண்டு துணை நிற்க வேண்டும்.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டின் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் சிறப்பாக செயல்பட இப்புத்தாண்டு புதுப்பொலிவை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும்.

உலக நாடுகளின் ஒற்றுமைக்கும், தீயவை அழிந்து, நல்லவை நீடிப்பதற்கும், ஏழ்மை நீங்கிடவும், பசி, பட்டினியிலிருந்து விடுபடவும், அனைத்து தரப்பு மக்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாகவும் 2020 ஆம் புத்தாண்டு புத்தொளியுடன் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி த.மா.கா சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும். இதுவரை சந்தித்த துன்பங்களும், துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பணிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.  இந்த புத்தாண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத, பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்ய புத்தாண்டில் உறுதியேற்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்