நியூயார்க் நகரில் சைக்கிள் மோதி காயமடைவோர் எண்ணிக்கை அதிகம்!

நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் அதிகரித்தாலும், அம்மாநகர மேயர் பில் டி பிளாசியோ அதுகுறித்து கவலை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுமார் 100 மைல் நீளம் கொண்ட பாதைகளை சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார் மாநகர மேயர். ஆனால், அதன்மூலம் ஏற்படும் விபத்துகளைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த விவகாரம் குறித்து அவர் மிகவும் குறைந்தளவு அக்கறையே எடுத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டுமுதல், 2250க்கும் மேற்பட்ட பாதசாரிகளை சைக்கிள்காரர்கள் மோதி காயப்படுத்தியுள்ளார்கள். அவர்களுள் 7 பேர் இறந்தே போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று மாநகர போக்குவரத்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு மன்ஹாட்டன் பகுதியில் மட்டும் மொத்தம் 134 பேர் சைக்கிள் மோதி காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நியூயார்க் நகரில் காயமடைந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.

கடந்த 2018ம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 113 என்பதாக இருந்தது. ஆனால், இந்தாண்டு அதே காலகட்டத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 127 என்பதாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.