மும்பை: பணமழை பொழியும் சமாச்சாரம் என்பதால், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபிஎல் 13வது சீசன், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தொடர் எப்போது நடைபெறும் மற்றும் எங்கு நடைபெறும் என்று இப்போது வரை எதுவும் தெரியவில்லை. ஆனால், பல்லாயிரம் கோடிகள் பணம் புரளும் விஷயமாகும் இது.
எனவே, என்னசெய்வது என்று தெரியாமல், பிசிசிஐ தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் மூலம் தாங்கள் ஏதேனும் கல்லாக் கட்டிவிட முடியுமா? என்று ஆசைப்படும் வேறுசில நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், போட்டியை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்து வருகிறன்றன.
இந்தவகையில், முதலில் அழைப்பு விடுத்தது இலங்கைதான். அதற்குடுத்து, ஐக்கிய அரபு அமீரகமும் அழைப்பு விடுத்தது. இந்நிலையில், சற்று தொலைவிலுள்ள நியூசிலாந்தும் தற்போது அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலும், 2014ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்தல் காரணமாக நடத்தப்பட்டது ‍ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஐபிஎல் தொடரை, இந்தியாவிலேயே நடத்த முயற்சிப்போம். ஒருவேளை முடியவில்லை என்றால், எந்த நாட்டில் நடத்துவது என்று, அணி உரிமையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்போம். எப்படிப் பார்த்தாலும், வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.