பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் – வலுவான நிலையில் நியூசிலாந்து!
ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்ததால் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அஸார் அலி அதிகபட்சமாக 93 ரன்களை அடித்தார்.
முகமது ரிஸ்வான் 61 ரன்களையும், பஹீம் அஷ்ரப் 48 ரன்களையும், சஃபார் கோஹர் 34 ரன்களையும் எடுத்தனர்.
நியூசிலாந்தின் ஜேமிசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிம் செளதி மற்றும் பெளல்ட்டுக்கு தலா 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
பின்னர், களமிறங்கிய நியூசிலாந்திற்கு, கேப்டன் கேன் வில்லியம்சன் இம்முறையும் சதமடித்து கைக்கொடுத்தார். அவர், 112 ரன்களுடன் இன்னும் களத்தில் உள்ளார். ஹென்றி நிக்கோலஸ் 89 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தற்போதைய நிலையில், இரண்டு நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 286 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து அணி, பாகிஸ்தானைவிட 11 ரன்கள் பின்னடைந்துள்ளது.