பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து – 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியது நியூசிலாந்து அணி.

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் மட்டுமே எடுக்க, நியூசிலாந்தோ, கேன் வில்லியம்சனின் இரண்டடை சதம், ஹென்றி நிக்கோலஸ் மற்றும் மிட்செல் ஆகியோர் அடித்த சதங்களின் உதவியுடன், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

இந்நிலையில், 362 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய பாகிஸ்தான் அணியில், எந்த நம்பிக்கை கீற்றும் வெளிப்படவில்லை. குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வயை தவிர்க்கும் வகையில் யாருமே விளையாடவில்லை.

அஸார் அலி மற்றும் சஃபார் கோஹார் அடித்த 37 ரன்களை அந்த அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்கள். முடிவில், 186 ரன்களுக்கே அன‍ைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 1 இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது. நான்காம் நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் 6 விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து பவுலர் ஜேமிசன், முதல் இன்னிங்ஸில் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 5. ஆகமொத்தம் இந்தப் போட்டியில் அவருக்கு 11 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. இவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.