முதல் டெஸ்ட் – 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற நியூசிலாந்து!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தனது முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 431 ரன்களைக் குவித்தது. ஆனால், பதிலுக்கு பாகிஸ்தானால் எடுக்க முடிந்த ரன்கள் வெறும் 239 ரன்கள் மட்டுமே.

எனவே, 192 ரன்கள் பின்தங்கியது பாகிஸ்தான். வலுவான முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய நியூசிலாந்து 5 விக்கெட்டுகளுக்கு 180 ரன்களை அடித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், பாகிஸ்தானின் வெற்றிக்கு 373 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டன.

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு, 3 பேட்ஸ்‍மென்களைத் தவிர வேறுயாரும் ஒத்துழைக்கவில்லை. பவாத் ஆலம் 102 ரன்களை அடிக்க, முகமது ரிஸ்வான் 60 ரன்களை சேர்த்தார்.

அஸார் அலி 38 ரன்களை நிதானமாக அடித்தார். மற்றவர்களின் யாரும் தேவையான ஆட்டத்‍தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில், 5ம் நாளின் 3வது செஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  271 ரன்கள் மட்டுமே சேர்த்து, 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான்.

நியூசிலாந்தின் 5 பவுலர்களான டிம் செளதி, டிரென்ட் பெளல்ட், ஜேமிசன், நீல் வாக்னர் மற்றும் சான்ட்னர் ஆகியோர், தங்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் தலா 2 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதுவும் ஒரு ஆச்சர்யமான அம்சமே!

தற்போதைய நிலையில், மொத்தம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.