ஆக்லாந்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி-20 போட்டியை வென்றதன் மூலம், டி-20 தொடரை, 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது நியூசிலாந்து.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால், அந்த அணியில் யாரும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை. அதிகபட்சமாக, மேத்யூ வேட் 44 ரன்களை அடித்தார்.

கேப்டன் பின்ச் 32 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே அடித்தார். ஸ்டாய்னிஸ் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர், சற்று எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு, துவக்கமே சிறப்பாக அமைந்தது. டெவான் கான்வே 36 ரன்கள் அடிக்க, கப்தில் 46 பந்துகளில் 71 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

கிளென் பிலிப்ஸ் 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்து, அனைத்தையும் முடித்து வைத்தார். இதனால், நியூசிலாந்து அணி 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 143 ரன்களை எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.