முதல் டெஸ்ட்டில் மோசமாக தோற்ற இந்தியா – 10 விக்கெட்டில் வென்ற நியூசிலாந்து!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 165 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுக்க, நியூசிலாந்து அணியோ 348 ரன்களைக் குவித்தது. அதனால், 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி, மீண்டும் நியூசிலாந்திடம் சரணடைந்தது.

வெறும் 191 ரன்களை மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்தது இந்திய அணி. மயங்க் அகர்வால் மட்டுமே 58 ரன்களை அடித்தார்.

நியூசிலாந்து தரப்பில் டிம் செளதி 5 விக்கெட்டுகளையும், டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த எண்ணிக்கையின் மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடிந்ததுதான் ஒரே ஆறுதல்.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட, விக்கெட் எதுவும் இழக்காமல் வென்றது அந்த அணி. இதன்மூலம், 2 போட்டிகள் கெண்ட டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியப் பிறகு, டெஸ்ட் போட்டியொன்றில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாகும் இது.