சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கூறி உள்ளார்.

சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடு, வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்  கூறி இருப்பதாவது:

பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது, மருத்துவமனைக்கு சென்று தொடக்கத்திலேயே பரிசோதனை செய்து கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதையும் தவிர்க்க முடியும். சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர்.

10 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தால் 10 நாட்களில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும். சென்னையில் ஒரே பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள முன்வந்தால், குறைந்தது 50 பேர் மாநகராட்சி அலுவலர்களை அணுகினால், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தடுப்பூசி முகாம்கள் அமைக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும். மக்களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே அபராதம் வசூலிக்கப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட 80 மார்க்கெட்டுகள் சென்னையில் உள்ளன. குறிப்பாக காசிமேடு மீன் மார்க்கெட்டில் விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுவதால் அந்த பகுதி மிகவும் சவாலாக உள்ளது என்று கூறினார்.