அடுத்த சர்ச்சை: சென்னை ஐ.ஐ.டி.யில் அசைவம் சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்

சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் அசைவம்  சாப்பிடுவோருக்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த அரசு கல்வி நிறுவனங்களில்  ஐ.ஐ.டி.யும் ஒன்று. இதன் கிளை சென்னை கிண்டியிலும்  செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபகாலமாக ஐ.ஐ.டி.  தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடல் பாடியது, மாணவர்கள் நடத்திய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திற்கு தடை விதித்தது போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ..டி.யில் உள்ள தனியார் உணவு விடுதியில்  சைவ, அசைவ உணவுகள் இரண்டும் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அசைவம் சாப்பிடுவோருக்கு தற்போது தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசைவம் சாப்பிடுவோருக்கு கைகழுவும் இடமும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.யின் உணவு விடுதி கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படியே இந்த முறை அமல்படுத்தப்பட்டு  இருப்பதாக  மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறந்த கல்வி நிறுவனம் என்று பெயர் எடுத்துள்ள ஐ.ஐ.டி.யில் நவீன தீண்டாமை நிலவுவதாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கல் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது வளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும் இல்லையென ஐ.ஐ.டி.  நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், “தாங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை மாணவர்களே முடிவு செய்கிறார்கள்.  அதே போல் எந்த உணவு விடுதியில் சாப்பிட வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில்  தாங்கள் தலையிடுவதில்லை.

எத்தனை மாணவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்று  கணக்கெடுத்து, அவர்களுக்கு உணவு வழங்குவதே எங்களது பணி” என்று  ஐ.ஐ.டி. நிர்வாம் தெரிவித்துள்ளது.