’ அடுத்த ஐபிஎல் போட்டிக்குள் தமிழ் கற்றுக்கொள்வேன் ’ – சத்தியம் செய்த தோனி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற திருநெல்வேலி மைதானத்திற்கு தல தோனி நேரில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். திருநெல்வேலிக்கு தோனி வருகை தந்தது இதுவே முதல் முறை.

சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டி நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. அப்போது மைதானத்திற்கு எதிர்பாரதவிதமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Dhoni

மைதானத்திற்கு வந்த உடன் ரசிகர்களை பார்த்து தோனி பேசினார். அப்போது, “ ஐபிஎல் போட்டிக்காக ஒவ்வொரு முறை நான் விளையாடும் போதும் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன். அடுத்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்குள் கண்டிப்பாக முயன்ற அளவு தமிழ் கற்றுக்கொள்வேன் “ என்று சத்தியம் செய்தார்.

மேலும், “ இங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டது, நான் அவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருக்கிறேன். எனவே நிறுவனத்தின் முதல் ஆலையைப் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரியதாக அமைந்தது.

dhoni-tnpl-chennai

அணித்தேர்வு குறித்து ஏகப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் இருந்தன. 30 வயதுக்கு மேல் உள்ள வயதான அணி என்றனர். வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் நான் அவ்வாறு உணரவேயில்லை. அனைத்துமே நாங்கள் சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடினோம்.

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களை வாழ்த்த வந்தேன். இங்கு தான் சி.எஸ்.கே.வுக்கு உயிரைக்கொடுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது சரியாக இருக்கும். நாங்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத போதிலும் கூட ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று தோனி கூறினார்.