சென்னை: தமிழ்நாட்டில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுஉள்ளது.  சென்னை, போரூரில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று தடுப்பூசி திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் , செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.  அப்போது,  அடுத்த இரண்டு வாரம் மிக மிக முக்கியமானது என எச்சரித்தார்.

தமிழகத்தில் தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, குடியிருப்பு நல மையங்களின் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்”.

மகாராஷ்டிராவில் தினந்தோறும் சுமார் 60,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாகத் தற்போது 5.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் ஊரடங்கு முடிவை அந்த மாநிலம் எடுத்துள்ளது.

பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் சூழல் இல்லை.  ஆனால், அதே நேரத்தில் இது கொள்கை ரீதியான முடிவு. எங்கள் அளவில் (சுகாதாரத் துறை) எந்த முடிவும் முடிவெடுக்க முடியாது. முதல்வருடன் கலந்து ஆலோசிக்காமல் நான் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் வணிகம், விற்பனை, திருமணம், இறப்பு, கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். நோய் பரவும் சூழலில் அனைத்து நிறுவனங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இதுவரை தொழிற்சாலைகள், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்து எந்தவொரு நோய்ப் பரவலும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர நோய்ப் பரவல் ஏற்பட்டது. அதேபோல சந்தைகள் போன்ற கூட்டங்களில் நோய்ப் பரவல் ஏற்பட்டதால் இவற்றில் தனி கவனம் செலுத்துமாறு கூறியுள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வருகிற நாட்களில் அதிகரிக்கும். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 1.45 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பில் உள்ளது.

இது நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும். மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ5.7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை 40.99 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வருகிற இரண்டு வாரம் மிக மிக முக்கியமானது. எனவே, அடுத்த இரண்டு வாரம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்தால் கொரோனா பரவும் எண்ணிக்கை குறையும். இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அந்தந்த தெரு, அந்தந்த வீடுகளில் கட்டுப்பாட்டு விதிகளைக் கறாராகக் கடைப்பிடியுங்கள். கூட்டத்தைத் தவிருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.