டில்லி

டுத்த வாரம் இந்திய அரசு 4 மாநிலங்களில் ஒத்திகை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி உள்ளது.  இதுவரை சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1.47 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா  பரவுதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி போடும் பணி பரவலாக நடந்து வருகிறது.

வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.  முதல் கட்டமாக பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசியான கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசியான கோவி ஷீல்ட் ஆகிய இரு மருந்துகள் மக்களுக்கு அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த தடுப்பு மருந்துகளை மக்களுக்கு முதலில் ஒத்திகை முறையில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.   முதல் கட்டமாக, அடுத்த வாரம்  அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது.   இதற்காக 2360 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த ஒத்திகை மூலம் ஒவ்வொரு நிறுவன கொரோனா தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது, எப்படிச் செலுத்துவது போன்றவற்றில் மேலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.