புதுடெல்லி:
நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

இந்தியா முழுவதும்  உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டன. அதையடுத்து மசோதாக்கள் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல் நீட் தகுதி தேர்வு நடத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார்.
இதன் காரணமாக தமிழக மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்வி படிக்க “நீட்” (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது. இந்த தகுதித்தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மாநிலங்களில் மத்தியஅரசின் சிபிஎஸ்சி  கல்வி பாடத்திட்டமே பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களில் மட்டுமே சமச்சீர் கல்வி என்று தனிப்பாடத் திட்டம் உள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் ‘நீட்’ போன்ற அனைத்திந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்படுகிறது. நீட் தேர்வு மூலம் அடுத்த ஆண்டு பெரும்பாலான தமிழக மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களின் சேர்க்கையே அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் , மருத்துவம் படிப்பது என்பது கனவாகி விடும்  நிலை உருவாகி உள்ளது.
neet
இந்த மசோதா மூலம் நாடுமுழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு மூலமே நடக்கும்.
இதன் காரணமாக ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரிக்கும் தனித்தனியாக நுழைவு தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும். அனைத்துக்கும் பொதுவாக நீட் தேர்வு எழுதினால் மட்டுமே போதுமானது. இதன் காரணமாக தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பல லட்சம், கோடிகணக்கில் பணம் கொடுத்து மருத்துவ சீட் வாங்குவது தடுக்கப்படும். தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்று  மத்திய சுகாதார துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.