தூய்மை இந்தியா : போபால் விஷ வாயு நச்சுக் கழிவுகளை அகற்ற மோடிக்கு வேண்டுகோள்

போபால்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டும் என தன்னார்வு தொண்டு மையங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மத்தியப் பிரதேசம் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 1984 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவில் விஷ வாயு கசிந்தது.  அதனால் பலர் மாண்டனர்.   பாதிக்கப்பட்ட பலர் இன்னும் பல உடல்நலக் குறைவால் அவதியுற்று வருகின்றனர்.   இன்னும் அந்த தொழிற்சாலையில் நச்சுக் கழிவுகள் தங்கி உள்ளன.  இந்த பேரிழப்பால் சுமார் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தது தெரிந்ததே.

இது குறித்து பாதிக்கப்பட்டோருக்காக போராடி வரும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பு உள்ளன.  அதில், “போபாலில் இப்போது யூனியன் கார்பைட் தொழிற்சாலை செயல்படவில்லை.   ஆனல் அங்கு இன்னும் நச்சுக் கழிவுகள் தேங்கி இருக்கின்றன.   இந்தக் கழிவுகளை அகற்ற  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்    இந்த நச்சுக் கழிவுகளினால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த நச்சுக்கழிவு 1,10,000 டன் மணலிலும் உள்ளதால் சுற்றுச் சூழல் மேலும் பாதிப்படைய மிகுந்த வாய்ப்புள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.