கொதிகலன் விபத்து : நெய்வேலி நிலக்கரி ஆணையத்துக்கு ரூ.5 கோடி அபராதம்

டில்லி

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக நிர்வாகத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

என் எல் சி என சுருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிர் இழந்து 10 பேர் படுகாயம் அடைந்தது நாட்டை உலுக்கிய சோக நிகழ்வாகும்.  இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப் பதிந்தது    வழக்கு நடுவர் ஏகே கோயல் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணையில் உள்ளது.

என் எல் சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விபத்தில் மரணமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க முடிவ்ய் செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்தார்.    இதை நடுவர் கோயல் ஏற்கவில்லை. இந்த தொகை இடைக்கால நிவாரணமாக வைத்துக் கொண்டு முழுத் தொகை குறித்து பின்னர் முடிவு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோயல், “இந்த விபத்து காரணமாக என் எல் சி நிர்வாகம் ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.   இதை இழப்பீடு வழங்க ஏதுவாக இன்னும் 2 வாரத்துக்குள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்துக்குச் செலுத்த வேண்டும்.   அத்துடன் இந்த விபத்து குறித்து சுதந்திரமாக ஒரு குழு ஆய்வு நடத்த வேண்டும்.  காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 5 லட்சமும்,  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோருக்கு ரூ.1 லட்சமும் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்.

கொதிகலன் வெடிப்பு தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலூர் மாவட்ட ஆட்சியர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், சென்னை ஐஐடி ஆகியவை கொண்ட நிபுணர் குழுவைத் தீர்ப்பாயம் அமைக்கிறது.  இவர்கள் கீழ்க்கண்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

விபத்து எப்படி ஏற்பட்டது?

விபத்து நடக்க யார் காரணம்? குறிப்பாக நிர்வாகமா, அல்லது அங்குள்ள ஊழியர்களா?

அங்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? பாதுகாப்பு நடைமுறை முறையாக கடைப் பிடிக்கப்படுகிறதா ?

கொதிகலன் வெடித்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா (நீர், காற்று , மண்)? அருகில் வசிப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், மறுசீரமைப்பதற்கும் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சேதமடைந்த சொத்துகள், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றின் மதிப்பு என்ன ?

மேலும் வேறு ஏதேனும் இது தொடர்பான பிரச்சினைகள் உள்ளனவா?

ஆகியவை ஆய்வு செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.