டில்லி

தேசிய பசுமை தீர்ப்பாயம் 24 மணி நேரத்துக்குள் ரூ. 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வாகன் நிறுவனக் கார்கள் பெருமளவில் இந்தியச் சாலைகளில் ஓடிக் கொண்டு இருக்கின்றன. அந்தக் கார்களில் இருந்து மாசு கடுமையாக வெளிப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதை ஒட்டி அந்த நிறுவனக் கார்கள் பரிசோதனை செய்த போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் இந்த காரில் இருந்து மாசு வெளிப்படுவது கண்டறியப்பட்டது.

அதை ஒட்டி தேசிய பசுமைத் திர்ப்பாயம் கடந்த ஆண்டு இந்த நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. ஆனால் வோக்ஸ்வாகன் நிறுவனம் அந்த அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்தது. அதை ஒட்டி எழுப்பப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், “இதுவரை எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் இவ்வளவு நாட்களாக அபராதத் தொகையை ஏன் செலுத்தவில்லை? உங்களுக்கு இனி எந்த கால அவகாசமும் வழங்க முடியாது. நீங்கள் உடனடியாக அதாவது ஜனவரி மாதம் 18 ஆம் தேதி 5 மணிக்குள் அபராதத் தொகையான ரூ.100 கோடியை செலுத்த வேண்டும்

அவ்வாறு செலுத்த தவறினால் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் கைது செய்யப்படுவார். அத்துடன் இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.