ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பதோடு, சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆலையை தொடர்ந்து போராடி வந்தனர். இந்த நிலையில் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நூறு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நூறாவது நாளான மே 22-ல் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இருநூறுக்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மே 28-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலை சீல் வைக்கப்பட்டது.

அதன்பிறகு ஆலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் மற்றும் ரசாயனப் பொருட்களை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

.இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். இதனால் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், வேதாந்தாவின் மனுவை நிராகரித்து, ஆலையை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.