ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய 3பேர் கமிட்டி: தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 3 பேர் குழு  அமைத்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 13ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட் டத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஆனால்,  ஆலையை இயக்க அனுமதியில்லை என தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது, மத்திய மாநில அரசுகள் சார்பில், ஸ்டெர் லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறது என்பது குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி,  சந்துருவை நியமிக்க தமிழக அரசு கோரியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேதாந்தா நிறுவனம், கர்நாடக மாநில நீதிபதி மூலம் விசாரணை நடத்த கோரியது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதா, வேண்டாமா என்பதை ஓய்வு பெற்ற நீதிபதி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி உள் 3 பேர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறி உள்ளது.

இதற்கும் வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. , இந்த மூவர் குழுவில் தமிழ்நாடு நீதிபதி யாரும் இடம்பெறக்கூடாது என்று கூறியது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்ட  விவகாரத்தில் மாநில அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக்களை 3 பேர் குழு அறிய வேண்டும் எனவும், விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்  உத்தர விடப்பட்டது.

ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் காப்பர் மட்டும் வேண்டும்.. ஆனால் தமிழக நீதிபதிகள் வேண்டாம் என்றும் கூறும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விஷமத்தனமான வேண்டுகோள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.