புதுடெல்லி: அனைத்து வகையான புற்றுநோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளை, தனது மருத்துவ தொகுப்பு திட்டத்திற்குள்(healthcare package) கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போதைய நிலையில் புற்றுநோய் தொடர்பான மருத்துவ தொகுப்பு திட்டங்கள் விரிவானதாக இல்லை. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு நோயாளி, பல்வேறு மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

இவற்றில், கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கம் போன்ற பல அம்சங்கள் அடக்கம். எனவே, பல்வேறான புற்றுநோய்களுக்கு இந்த அனைத்து அம்சங்களையும் ஒரே தொகுப்பு திட்டத்திற்குள் கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

“புற்றுநோய்க்கான சிகிச்சை நடைமுறைகள் மருத்துவ தொகுப்பு திட்டத்தில் விரிவாக இடம்பெறவில்லை. எனவே, அவற்றை விரிவாக்கி வலுப்படுத்தும் வகையில் நாங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளோம். இதற்கு நிர்வாக அமைப்பின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அனைத்து செயல்முறைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் தேசிய மருத்துவ ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.