ரூ.20 கோடி: ‘பாஸ்டேக்’ வழித்தடத்தில் பாஸ்டேக் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அபராதம் !

டெல்லி:

‘பாஸ்டேக்’ வழித்தடத்தில் பாஸ்டேக் இல்லாமல் வாகனங்களில்  பயணம் செய்தவர்களிடம் இருந்து அபராதமாக இதுவரை ரூ.20கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்ட வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, டிஜிட்டல்மயமாக்கம் மூலம், வாகனங்களுக்கு பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முறையிலான  கட்டண வசூல்முறையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமல்படுத்தி உள்ளது.

இந்த டிஜிட்டல் முறையிலான கட்டண வசூல் ஜனவரி 15ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இன்னும் ஏராளமான வாகனங்களும், வாகன ஓட்டிகளும் பாஸ்டேக் முறைக்கு மாறவில்லை.

இதைத்தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மற்றும் கட்டண வசூல் ஆகிய இரு முறைகளிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ‘பாஸ்டேக்’ பயன்படுத்துவோருக்கு என தனி வழியும், சாதாரண முறையில் சுங்க கட்டணம் செலுத்துவோருக்கு தனி வழியும் உள்ளது.

இதறகிடையில், பாஸ்டேக் பெறாத வாகனங்கள், பாஸ்டேக் செல்லும் வாகனப்பகுதி வழியாக சென்றால், அதனிடமிருந்து அபராதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார்  18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.