ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வினியோகித்ததாக முன்னாள் கிராம தலைவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
தெற்கு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் சிலர் பிடிபட்டனர். அதே நேரத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி நவீத் முஷ்டாக் ஷாவின் விசாரணையின் போது சில தகவல்கள் வெளியாகின.
அதன் அடிப்படையில் சோபியான் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அஹ்மத் மிர் என்பவரை புதன்கிழமை என்ஐஏ கைது செய்தது. மற்ற பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவதில் மிர் ஈடுபட்டதாக, விசாரணையின் போது ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மிர் 2011ல் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரியில் என்ஐஏ பல இடங்களில் சோதனை நடத்தியதாகவும், மீரின் வீடு அவற்றில் ஒன்று என்றும் ஒரு அதிகாரி கூறினார், ஆனால் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை.
மிர் ஒரு ஆயுத வியாபாரி. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் 6 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக என்ஐஏ மூத்த அதிகாரி தெரிவித்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது,
சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக 2018 ல் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியவில்லை. தென் காஷ்மீரில் பெரும்பாலும் 20,000 பஞ்சாயத்து இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.