டெல்லி: பீமா கோரேகான் விசாரணை முயற்சியை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கைவிட்டது.

புனேவில் பீமா கோரேகானில் ஆங்கிலேயர்களுக்கும், பேஷ்வா படையினருக்கும் சண்டை மூண்டது. அந்தப் போரில் உயிரிழந்த தலித்துகளை நினைவுகூரும் வகையில், பீமா கோரேகானில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

பீமா கோரேகானில் ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி தலித் மக்கள் ஒன்று கூடி நினைவு தினத்தை அனுசரிப்பது வழக்கமாக உள்ளது. போர் நடைபெற்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், த 2018ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே வன்முறை மூண்டது.

அதில் ஒருவா் கொல்லப்பட்டார். இந்த வன்முறை தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று என்சிபி தலைவா் சரத் பவார் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வழக்கின் தன்மையை கொண்டு ஏப்ரல் 2019ம் ஆண்டு அதை விசாரிப்பது குறித்த தமது விருப்பத்தை என்ஐஏ மத்திய அரசுக்கு அனுப்பியது. இது பின்னர் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதை தொடர்ந்து மாநில அரசின் காவல்துறை உயரதிகாரிகள் டெல்லி சென்று என்ஐஏ அதிகாரிகளை சந்தித்து, வழக்கு பற்றிய விசாரணைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக விளக்கியது.

பல மணிநேர கலந்துரையாடல்களுக்குப் பிறகு, என்ஐஏ அதிகாரிகள் திருப்தி அடைந்தனர். மேலும் ஆதாரங்களை சேகரித்ததற்காக காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, என்ஐஏ விசாரணையை எடுத்துக் கொள்ள முன்வர வில்லை.