லவ் மட்டுமே, ஜிகாத் இல்லை!: ஹாதியா வழக்கு முடிவுக்கு வந்தது  

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹாதியா வழக்கு முடிவுக்கு வந்தது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயின்று ந்தார். இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளைஞர் சபி ஜகானை மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார்.

தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. பிறகு ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

அடுத்து, ஹாதியா 25 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில்,  நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும்,  ஆரம்பம் முதலே எனது தந்தை சிலரின் கட்டுப்பாட்டில்  செயல்பட்டு வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவர் மீது அல்ல. எனது பெற்றோர்களும், மற்றவர்களும் இஸ்லாமை கைவிடுமாறும், கணவரை விட்டு வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி  வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரளாவில் காதல் மூலம் மதமாற்றம் நடைபெறுகிறதா என்பதை அறிய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. அந்த அமைப்பு 89 திருமண மதமாற்ற வழக்குகளில் 11 வழக்குகளை கையில் எடுத்து விசாரித்தது. இதுபோன்ற புலனாய்வில் குறைந்தபட்சம் 3 வழக்குகளையாவது ஆய்வு செய்ய வேண்டும். ஆனாலும் உறுதியான தகவலை அறிவதற்காக சிக்கலான 11 வழக்குகளை எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. அதில் ஹாதியா வழக்கும் ஒன்றாகும்.

இந்த விசாரணையின் முடியில், கேரளாவில் எந்த வித கட்டாய மதமாற்றமும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியது. மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே மதம் மாறியதாகவும் கூறியது.

தவிர மற்ற மதத்திற்கு மாறி வாழும் பெண்கள் மற்றும் ஆண்கள் அதை விரும்பியே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே லவ் ஜிகாத் என்று பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் லவ் மட்டுமே ஜிகாத் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.