புல்வாமா தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்ஐஏ

டெல்லி: புல்வாமா தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 2019ம் ஆண்டு பிப்ரவரி  14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்தனர். அப்போது திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம், ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது மோதியது.

தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். தாக்குதல் தொடர்பான விசாரணையின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது என்ற பாக். தீவிரவாத இயக்கம் இருப்பது தெரியவந்தது.

வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனாலும் குற்றப்பத்திரிகை தாக்கலாகவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந் நிலையில், காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் அடங்கிய  குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்‍கல் செய்து இருக்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர்கள் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.