நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ உடன் கைகோர்க்கும் என்ஐஏ…

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விசாரணையில் என்ஐஏ சேரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரின் மரணம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் போதை மருந்து எடுத்துக்கொண்டதும், பாலிவுட்டில் போதை பழக்கம் பரவி உள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்திக்கு அதில் தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் குற்றம்சாட்டி வந்தார். தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் போதைப்பொருள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளதால்,  சிபிஐ உடன் இணைந்து, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதா ககூறப்படுகிறது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்தியஅரசு, சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக, இரு மாநிலங்களும் கலந்தாலோசித்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985, பிரிவு 53ன்படி,  இந்த வழக்கில் போதை பொருள் தொடர்பான விசாரணைகளை என்.ஐ.ஏ இன் இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளது. இந்த விசாரணை அதிகாரிகள் மாநில காவல்துறையினரின்  அதிகாரிகளை மீறி, விசாரிக்கும் உரிமை பெற்றுள்ளது.

ஆனால், மத்தியஅரசின் அறிவிப்பு குறித்து,  தங்களுக்கு ஏதும் தகவல் வரவில்லை மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். ஆனால்,  போதைப் பொருள் பயங்கரவாத குற்றங்களை என்ஐஏ அதிகாரிகள் திறம்பட விசாரிக்க முடியும் என்று ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

என்.டி.பி.எஸ் குற்றங்களை விசாரிப்பதற்கான மாநில காவல்துறை அதிகாரிகளின் அதிகாரங்கள் நீர்த்துப் போகாததால், இது மாநில காவல்துறையின் அதிகாரங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, ’’ என்று முன்னாள் என்.ஐ.ஏ மற்றும் தற்போது ஏ.டி.ஜி (சட்டம் ஒழுங்கு) அசாம், ஜி.பி. சிங் கூறினார்.

இது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு ஆலோசிப்பது குறித்து தனக்குத் தெரியாது என்று மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

”சுஷாந்த் வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே சில பல தகவல்கள் பரவி வருகின்றன.  மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனாவுக்கு இடையே நிலவும் அரசியல் மோதலில், சிவசேனாவைப் பழிவாங்கிட பாஜக முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இன்னொரு பக்கம் பாலிவுட், நெப்போடிசம்  என மற்றொரு பக்கமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக,  இந்த விவகாரத்தை, முதலில் மகாராஷ்டிர போலீஸ், பின்னர் பிஹார் போலீஸ், சிபிஐ என இவ்வழக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் பீகார் அரசின் வேண்டுகோளை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு மத்தியஅரசு மாற்றி உத்தரவிட்டது.

சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையே உரசல் நீடித்து வரும் நிலையில், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு மாநில அரசு அதிகாரிகள் சரியா முறையில் ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, சிபிஐ, அமலாக்கத்துறையுடன் என்ஐஏ-வும் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.