நெல்லை:

லங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, நெல்லையில் இரண்டு தொழிலதிபர்கள் வீடு மற்றும் கடைகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, அங்கு குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் பலர் தமிழகம் மற்றும் கேரளாவில் தங்கியிருந்த தகவல் வெளியானது.

மேலும், தமிழகத்திலும் நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக புலனாய்வு குழு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் குறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் கோவையில் அதிரடி சோதனை நடத்தி  வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டியதாக  6பேரை கைது செய்தனர். இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் பெயின்ட் கடை நடத்தி வரும் தொழிலதிபர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழியை சேர்ந்த பெயிண்ட் கடை அதிபர் திவான் முஜிபுர் என்பவரது வீட்டிலும், திவான் முஜிபுரின் உறவினரான புளியங்குடியை சேர்ந்த மைதீன் என்பவர் புளியங்குடியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

இங்கம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் மற்றொரு பிரிவினர் மைதீன் வீட்டிலும் அவரது பெயிண்ட் கடையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வீட்டில் நுழைந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. செல்போனிலும் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை செய்தனர். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் குறித்தும் ஆய்வு வருகின்றனர். நேற்று இரவு முதல் சோதனை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே   வளைகுடா நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக  தென்காசியை சேர்ந்த கோழிப் பண்ணை அதிபர் ஜல்லி மைதீன் என்ற அகமது சாலிக் என்பவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள்  கைது செய்தது குறிப்பிடத்தக்கது.