தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தில் தமிழகத்தில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி அதிரடி சோதனை

சென்னை:

தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தின் பேரில், தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி சோதனை நடத்தியது.


தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு 10 பேர் மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இதன்பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், முத்துப்பேட்டை, கீழக்கரை, தேவிப்பட்டணம், லால்பேட்டை மற்றும் சேலம் ஆகிய 10 இடங்களில் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியினர் திங்களன்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, 3 லேப்டாப்கள், 3 ஹார்டு டிஸ்க்குகள், 2 பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக, தேசிய புலனாய்வு ஏஜென்ஸி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் செயல்பட்டு வரும் 10 பேர் கொண்ட குழுவினர்,அவர்களது தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதம் வாங்கவும், நிதி திரட்டவும், சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை தப்பிக்க வைக்கவும் சதி திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10 பேரில், ஷேக் தாவூத், முகமது ரியாஜ், சாதிக், முபாரீஸ் அகமது, ரிஜ்வான் மற்றும் ஹமீது அக்பர் ஆகியோர் வீடுகளில் திங்களன்று (இன்று) சோதனை நடத்தினர்.

10 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.