அபுஜா: நைஜீரியாவில் 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்நிலையில், போர்னோ பிராந்தியம் அருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த சந்தேக நபர் உணவு தரும்படி கேட்டுள்ளார். அவரை பிடித்து விவசாயிகள் விவரம் கேட்டுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட தகவல் அறிந்த தீவிரவாதிகள் கும்பலாக வந்து துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் 110 விவசாயிகளை கொடூர முறையில் கொன்றுள்ளனர்.

ஐநா  அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.