பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.

புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இங்கிலாந்தில் இருந்து வந்த நபர்கள் பலருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வேகமாக பரவும் இந்த கொரோனா தொற்று காரணமாக, மக்கள் மீண்டும் பீதியடைந்து உள்ளனர்.

இந்த நிலையில்,  கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும்,  புதிய வகை கொரோனா பரவுவதால் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது எனவும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.