கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: மணிப்பூரில் இரவு நேர ஊரடங்கு

இம்பால்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான கொரோனா ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலத்தில் இரவு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  ஊரடங்கு எத்தனை நாள்கள் அமலில் இருக்கும் என்பது பற்றி குறப்பிடப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்யாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இறுதிச் சடங்குகள், திருமணங்கள் போன்ற தவிர்க்க முடியாத கூட்டங்களை தவிர அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய கூட்டங்களில் 20 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.