பெங்களூரு

ர்னாடகாவில் இரவு நேர மலை ஏற்றம் தடை என அமைச்சர் அறிவித்ததை ஒட்டி புக் மை ஷோ என்னும் செயலி மலை ஏற்ற நிகழ்வுக்கான டிக்கட்டுக்கள் பதிவு செய்வதை நிறுத்தி உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தேனி பகுதியில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீவிபத்தில் சிக்கி 19 பேர் மலை ஏறும் பயிற்சியில் உயிர் இழந்தனர்.    தமிழ்நாடு அரசு அவர்கள் அனுமதி இன்றி மாலை வேளையில் மலை ஏறத் தொடங்கியதாக கூறியது.   இந்த நிகழ்வு நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த மலை ஏற்றம் தமிழ்நாட்டில் மட்டும் இன்றி அண்டை மாநிலமான கர்னாடகா மாநிலத்திலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.     பகல் நேரங்களில் வெயில் அதிகம் என்பதினால் மலை ஏறுபவர்கள் இரவில் மலை ஏறுவதை விரும்புகின்றனர்.   அதை ஒட்டி கர்னாடகா சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே  இரவு நேரத்தில் மலை ஏறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இவ்வாறு கேரளா மாநிலத்தில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது   மேலும் அவ்வாறு மலை ஏறும் நிகழ்வுக்கு முன் பதிவு செய்து வரும் “புக் மை ஷோ” என்னும் இணைய தள செயலிக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இரவு நேர மலை ஏறுதல் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.    இவ்வாறு மலை ஏறும் நிகழ்வை அமைப்பவர்களுக்கும் அதை ஊக்குவித்து அனுமதிச் சீட்டை விற்பனை செய்யும் புக் மை ஷோ இணைய தள செயலிக்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.   இனியும் இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.    இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் பற்றிய விவரங்களை இந்த செயலி உடனடியாக எனக்கு வழங்க வேண்டும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அந்த இணைய தள செயலி புக் மை ஷோ தனது டிவிட்டர் பக்கத்தில், “அன்புள்ள ஐயா, மலை ஏறும் விவகாரத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.  நாங்கள் இனி அது போன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்க மாட்டோம்.  விரைவில் எங்கள் வர்த்தகக் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.  மேலும் விவரங்கள் இருப்பின் அவர்களிடம் நீங்கள் தெரிவிக்கலாம். ” என பதிந்துள்ளது.

அத்துடன் மலை ஏறுதல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு உள்ளிட்டவைகளும் அந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.